|
உலகெங்கும் உள்ள புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களின் சினிமா உலகைப் பொறுத்தவரை இப்போது பல திரைப்பட தயாரிப்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் ஒஸ்லோவிலும் நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக "மீண்டும்" எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அந்த வகையில் கடந்த 08.09.2007 பூஜையுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஆரம்பமானது.
வன்முறை வாழ்க்கையை விரும்பும் இளைஞன் ஓருவன் தன் வாழ்க்கைப் பாதையில் காதல் வயப்படுகின்றான். வன்முறை வாழ்வை விட்டு நல்வனாக வாழ முயற்சிக்கின்றான். ஆனால் அவனால் நல்வனாக வாழ முடிகின்றதா? இல்லையா என்பதை பல புதிய திருப்பங்களுடன் சொல்வதே கதையாகும். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் வாழ்வனுபவங்களைப் பதிவுசெய்யும் ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்பட முயற்சி இதுவாகும். இந்த முயற்சிக்கு தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் வி.எஸ்.உதயாவும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை சுவேதா அவர்களும் நோர்வே நாட்டிற்கு வருகை தந்திருக்கின்றனர். இத் திரைப்படத்தில் நடிப்பதற்காக அறுவதுக்கும் மேற்பட்ட எம் தமிழ் உறவுகள் இணைந்திருக்கின்றார்கள். ஐPவன், தனா எனும் இரு இளைஞர்கள் துடிப்புடன் நடிக்க அவர்களின் நாடித்துடிப்பறிந்து நடிக்கின்றார் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் நடிகை சுவேதா அவர்கள். நோர்வே தமிழ்த் திரைப்பட(Norway Tamil Picture) நிறுவனம் சார்பாக எஸ்.துருபன் அவர்கள் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் திரைப்படத் தயாரிப்புகளில் அனுபவமிக்க பல தொழிநுட்பக் கலைஞர்கள் இணைந்திருக்கின்றார்கள். இவர்களுக்குப் பக்கபலமாகவும், திரைப்படத் தயாரிப்பு மேலாளாராகவும்; வி.எஸ்.உதயா (இசையமைப்பாளர்) அவர்கள் பணியாற்றுகின்றார். ஏற்கனவே தொப்புள்கொடி, நிஐங்கள் போன்ற திரைப்படங்களை இயக்கி பல அனுபவங்களைப் பெற்ற இயக்குனர் ஸ்ரிபன் அவர்கள் இத்திரைப்படத்தை கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகின்றார். இவருடைய மேடை நாடகங்கள் ஓஸ்லோ வாழ் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபல்யமானது. இவரோடு உதவி இயக்குனராகப் பணியாற்றுகின்றார் நவசுதன் அவர்கள். ஆகவே இந்த மீண்டும் எனும் முழுநீளத் திரைப்படத்தை ஒரு தரமான படைப்பாக்குவதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ் திரைப்படத் தயாரிப்பு ஆரோக்கியமான பாதையில் செல்லவேண்டும் என்ற ஆதங்கத்துடன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தயாரிப்பு ஆகிய முக்கிய பொறுப்புகளை ஏற்றிருக்கின்றார் துருபன் அவர்கள். காதல் கடிதம், காதல் மொழி போன்ற இறுவட்டுக்களில் பாடல்களை எழுதியிருக்கும் வசீகரன், இயக்குனர் ஸ்ரீபனும் பாடல்களை எழுத திருவின் இசையில் பாடல் பதிவு பணிகள் திறம்பட நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஓளியமைப்பை சாங் அவர்கள் கவனிக்கின்றார். ஒப்பனையாளராக சசி கிரிதரனும், சண்டைப்பயிற்சியாளராக சிவா அவர்களும் பணியாற்றுகின்றார். வரைகலை விக்கி,சனு. நிழற்படங்கள் மனோ. மக்கள் தொடர்பு செழியன். வசீகரன் ஊடகத் தொடர்புகளை மேற்கொள்ளுகின்றார். 


 |